கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வங்கிகளில் குவியும் வாடிக்கையாளர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே கடந்த ஆண்டு முதன்முதலாக கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டது சின்னசேலத்தில் தான். அதன்பிறகு தான் கொரோனா மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவியது. தற்போதுவரை சின்னசேலத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓரிருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தும் உள்ளனர். இதையடுத்து அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தியதுடன், கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

 மேலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் கண்டிப்பாக ரேஷன் கடை, வங்கிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் சின்னசேலத்தில் உள்ள வங்கிகளின் முன்பு காலை 9.45 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சிலர் முக கவசம் அணியாமலும் முண்டியடித்து செல்கின்றனர். ஆனால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்திட வங்கி நிர்வாகம் உள்ளிட்ட எந்த துறையும் முன்வரவில்லை.  இதனால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இதைப்போலத்தான் கச்சிராயபாளையத்தில் உள்ள இரண்டு வங்கிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>