காரிமங்கலம் பகுதியில் மாம்பழம் விற்பனை சரிந்ததால் சாலையோரம் கொட்டும் அவலம்-விவசாயிகள் வேதனை

காரிமங்கலம் : காரிமங்கலம் பகுதியில் மாம்பழம் விற்பனை சரிந்ததால், விற்பனையாகாத மாம்பழங்களை வியாபாரிகள் சாலையோரத்தில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக இங்குள்ள கும்பாரஅள்ளி, திண்டல், அண்ணாமலைஅள்ளி, முக்குளம், மொட்டலூர், எலுமிச்சனஅள்ளி, எர்ரசீகலஅள்ளி மற்றும் அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில், அகரம், பண்ணந்தூர், பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் விளைவிக்கப்படும் பல்வேறு வகையான மாம்பழ வகைகள், காரிமங்கலத்தில் உள்ள மாங்காய் மண்டிக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மாம்பழ விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டில் மா விளைச்சல் போதிய அளவில் இல்லாத நிலையில் மாம்பழ விற்பனையும் சரிந்துள்ளது.

குறிப்பாக பெங்களூரா, செந்தூரா, அல்போன்சா, பங்கனபள்ளி மல்கோவா போன்ற வகைகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் ஊரடங்கு காரணமாகவும் போதிய வருமானம் இல்லாத நிலையில் மாம்பழம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாம்பழங்கள் விற்பனையாகாமல் மண்டிகளில் தேங்கி கிடக்கிறது. மேலும் பழங்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வேறு வழியின்றி சாலையோரங்களில் கொட்டப்படும் அவலமும் தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து மா விவசாயி ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்த கோபால் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு மற்றும் மாங்கூழ் தொழிற்சாலை செயல்படாத காரணத்தால், மா விற்பனை பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மா சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பெரும் அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: