சூளகிரியில் அடுத்தடுத்து விபத்து லாரி கவிழ்ந்து ரோட்டில் சிதறிய மரத்துண்டுகள்-டூவீலரில் வந்த வாலிபர் பலி

சூளகிரி : சூளகிரியில் லாரி கவிழ்ந்து மரத்துண்டுகள் ரோட்டில் சிதறிய நிலையில், அந்த வழியாக வந்த டூவீலரில் சென்ற வாலிபர் மீது டிப்பர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் சீதாபுதூர் பகுதியில் இருந்து 30 டன் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்திற்கு புறப்பட்டது. கர்நாடக மாநிலம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன்(55) என்பவர், லாரியை ஓட்டி வந்தார். கிளீனராக அதே பகுதியைச் சேர்ந்த ஜோகித்(20) உடன் வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த மரக்கட்டைகள் ரோட்டில் சிதறின. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார் பொக்லைன் கொண்டு மரத்துண்டுகளை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த வழியாக ஓசூரில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி பூபாலன்(30) என்பவர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். மரத்துண்டு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிடந்ததை பார்த்ததும் டூவீலரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில், பூபாலன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>