எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?!

நன்றி குங்குமம் டாக்டர்

டிப்ஸ்


தொழில்நுட்ப ரீதியாக இன்றைய நவீன வாழ்க்கை ஒருபுறம் பிரமிக்க வைக்கிறது. ஆனாலும், மறுபுறம் மிகுந்த சுகாதாரக்கேடாக இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலே இப்படி இருப்பதால் கைகளின் வழியாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் மிகுதியாகவே ஆகிவிட்டது. இத்தகைய நிலையில், நம்மைத் தற்காத்துக் கொள்ள கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கென சில முக்கியமான நேரங்களையும், கைகளைக் கழுவும் முறை பற்றியும் விளக்குகிறார்கள்.

சரி... எப்போதெல்லாம் கைகளைக் கழுவ வேண்டும்?

* உணவு சமைக்கச் செல்லும் முன்பும், சமைத்த பின்பும்...
* உணவு உண்ணும் முன்...
* உடல்நலக் குறைவானவர்களைக் கையாண்ட பிறகு...
* ஏதேனும் காயத்துக்கு அல்லது புண்ணுக்கு மருந்து தடவிய பிறகு...
* மிக முக்கியமாக கழிப்பறை சென்று வந்த பிறகு...
* குழந்தைகளுக்கு டயாபர் மாற்றிய பிறகு அல்லது கழிவறை சென்று வந்த குழந்தையை சுத்தம் செய்த பிறகு...
* கைகளை வைத்து இருமும்போது அல்லது சளியை சுத்தம் செய்யும்போது...
* ஏதேனும் ஒரு விலங்கையோ அல்லது செல்லப் பிராணியையோ தொடும்போது அல்லது செல்லப் பிராணிக்கு உணவு வழங்கிய பிறகு அல்லது செல்லப்பிராணியின் கழிவுகளை அகற்றிய பிறகு...
* குப்பைகளை அகற்றிய பிறகு அல்லது வீட்டினை சுத்தம் செய்த பிறகு...

மேற்கண்ட நேரங்களில் கைகளைக் கழுவுவது அவசியம். கைகளைக் கழுவுவதற்கும் ஒரு முறை இருக்கிறது.

பைப்பிலிருந்து வருகிற சுத்தமான தண்ணீரால் அல்லது ஓடுகிற தண்ணீரால் கைகளை முழுவதுமாக நனைத்துக் கொள்ளுங்கள். சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். விரல் இடுக்குகளில் சோப்பு தேய்ப்பது அவசியம். தண்ணீரில் 20 விநாடிகள் வரையாவது கழுவ வேண்டும்.

20 விநாடிகளை கணக்கில் வைத்துக் கொள்ள ஏதேனும் உங்களுக்குப் பிடித்த சினிமா பாடலின் பல்லவியை மட்டும் 2 முறை பாடுங்கள். கைகளைக் கழுவிய பிறகு, சுத்தமான துண்டினால் துடைத்துக் கொள்ளுங்கள். அழுக்குத் துணியால் துடைத்தால் அதுவரை நீங்கள் மெனக்கெட்டு கழுவியது வீணாகிவிடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!

- ஜி.ஸ்ரீவித்யா

× RELATED ஒருபுறம் அத்துமீறித் தாக்குதல்...