பாஜவில் ஜான்குமாருக்கு பதவி மறுப்பு எதிரொலி என்ஆர்.காங். அமைச்சர் பட்டியலை மாற்ற ரங்கசாமி தீவிர ஆலோசனை: 24ம் தேதி பதவியேற்பு விழா?

புதுச்சேரி:  பாஜ அமைச்சர்கள் பட்டியலில் இருந்த ஜான்குமார் எம்எல்ஏ திடீரென நீக்கப்பட்டதன் எதிரொலியாக, என்ஆர்.காங்கிரஸ் அமைச்சரவை பட்டியலில் மாற்றம் செய்யப்படவுள்ளது. புதுச்சேரியில் என்ஆர்.காங்., பாஜ கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். என்ஆர்.காங்., பாஜ இடையே அமைச்சர்கள் பங்கீடு தொடர்பாக, சமரசம் ஏற்பட்டு பாஜவுக்கு 2 அமைச்சர்கள், என்ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள் என முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகும் அமைச்சர்கள் பதவியேற்பு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.  பாஜக தரப்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாஜ அமைச்சர் பட்டியலில் திடீரென ஜான்குமார் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஊசுடு தனித்தொகுதியை சேர்ந்த சாய் ஜெ சரவணன்குமார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இதனால் ஜான்குமார் ஆதரவாளர்கள் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு கட்சி பேனரை கிழித்து, அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தி சூறையாடினர். மறியலிலும் ஈடுபட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பாஜக அமைச்சர் பட்டியல், முதல்வர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (21ம் தேதி) அமைச்சரவை பதவியேற்பு என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், பதவியேற்பு விழா மீண்டும் தள்ளிப்போகிறது. பாஜ அமைச்சர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதன் எதிரொலியாக என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

 ஏற்கனவே, என்ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 அமைச்சர் பதவிகளை பெற லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், ராஜவேலு உள்பட 6 பேர் போட்டியில் உள்ளனர். தற்போது பாஜவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சாய் ஜெ சரவணன்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதால், என்ஆர்.காங்கிரஸ் அமைச்சர் பட்டியலில் மாற்றம் செய்ய ரங்கசாமி முடிவு செய்துள்ளார். பட்டியலை இறுதி செய்யும்பட்சத்தில் இன்று அவர் கவர்னரை சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை வழங்குவார் என தெரிகிறது. இதையடுத்து பவுர்ணமி நாளான வரும் 24ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 50 நாட்களை கடந்து விட்டதால் அமைச்சர்கள் பதவியேற்பை விரைந்து முடிக்க முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Related Stories: