வெளிநாடுகள் செல்பவர்களுக்கு 28 நாளில் கோவிஷீல்டு 2வது தவணை தடுப்பூசி: சுகாதாரத்துறை ஏற்பாடு

சென்னை:   கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணைக்கும், இரண்டாவது தவணைக்கும் இடைவெளி 4 வாரத்தில் இருந்து 12 வாரங்களாக அதாவது 84 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்பவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது தவணையை 4 வாரத்தில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் கேட்ட போது கூறுகையில், ‘கல்வி, வேலை, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள், ஒலிம்பிக் போட்டியை பார்வையிட வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் தவணையை 28 நாட்களில் போட்டுக் கொள்ளலாம். இவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்னையில் 19 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 84 நாட்கள் இடைவெளியில் தான் கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: