கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ‘கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைவருக்கும் தேசிய பேரிடர் நிதியில் இருந்து 4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இறந்த சுமார் 3.86 லட்சம் பேருக்கும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின்படி தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில், கொரோனா பாதிப்பு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது., கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் நபர்களுக்கு, அவர்கள் கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று மருத்துவர்கள் சான்று அளிப்பதில்லை. அதனால், கொரோனா பாதிப்பால் மருத்துவனையில் இறப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறியுள்ளனர். இதை கடந்த 11ம் தேதி விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே பெரும் தொகையை செலவு செய்து வருகின்றன. இதனால், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க முடியாது. இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களுக்கு மட்டுமே, இந்த நிதியில் இருந்து இழப்பீடு வழங்க முடியும். கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்கினால் அது மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தி விடும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், திடீரென மாரடைப்பு போன்ற காரணங்களால் இறக்கின்றனர். அவர்களுக்கும்  கொரோனாவால் இறந்ததாக சான்றிதழ் வழங்கப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: