×

டெல்டா கொரோனா வைரசால் இங்கிலாந்தில் 3வது அலை: 4 மாதத்துக்குப் பின் தினசரி பாதிப்பு அதிகரிப்பு

லண்டன்: இந்தியாவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசால் இங்கிலாந்தில் 3வது அலை ஏற்பட்டு, பாதிப்புகள் அதிகமாகி இருக்கிறது.     இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக வீரியமிக்கது. இந்த வகை வைரசால் இந்தியாவில் 2வது அலை ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பலர் பலியாகினர். இப்போதுதான் 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, இந்த டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் 70 நாடுகளில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த வைரசால் இங்கிலாந்தில் மூன்றாவது அலை உருவாகி இருக்கிறது. இந்த நாட்டில் முதல் மற்றும் 2வது அலை ஓய்ந்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது டெல்டா வைரசால் 4 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, டெல்டா வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருவதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கூறி வந்த நிலையில் தற்போது தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

  அந்நாட்டின் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு இணைக் குழுவின் ஆலோசகரான பேராசிரியர் ஆடம் பின் அளித்த பேட்டியில், ‘‘இங்கிலாந்தில் அதிக வீரியம் கொண்ட டெல்டா வகை வைரசுக்கும், தடுப்பூசிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனாலும், இதன் வேகம் தீவிரமாக இல்லை என்றாலும், 3வது அலை வந்து விட்டது நிச்சயம். இங்கிலாந்தில் பெரும்பாலான இளம் வயதினர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இனி முதியவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது,’’ என்றார். இது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

பிரதமர் போரிஸ் கவலை
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்த பேட்டியில், ‘அடுத்த மாதம் 19ம் தேதிக்குள் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது 3வது அலை ஏற்பட்டுள்ளதால் எங்கள் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என கவலை தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவுக்கு இதுவரை 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் அதிக பலியை சந்தித்த நாடு இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : UK , 3rd wave in the UK by delta corona virus: increase in daily exposure after 4 months
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது