இந்தியா 217 ரன்னில் ஆல் அவுட் நியூசிலாந்து நிதான ஆட்டம்

சவுத்தாம்ப்டன்: நியூசிலாந்து அணியுடனான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2ம் நாளில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சம் இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரோகித் 34, கில் 28, புஜாரா 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி 44, ரகானே 29 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். கோஹ்லி மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஜேமிசன் வேகத்தில் வெளியேறினார். பன்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ரகானே 49 ரன் எடுத்து (117 பந்து, 5 பவுண்டரி) வேக்னர் வேகத்தில் லாதம் வசம் பிடிபட்டார். அஷ்வின் 22 ரன், இஷாந்த் 4, பும்ரா 0, ஜடேஜா 15 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (92.1 ஓவர்). ஷமி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் கைல் ஜேமிசன் 22 ஓவரில் 12 மெய்டன் உள்பட 31 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். டிரென் போல்ட், நீல் வேக்னர் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அந்த அணி 33 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்தது. டாம் லாதம் 29 ரன், டிவோன் கான்வே 38 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Related Stories:

>