ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி வாள்வீச்சு வீராங்கனை பவானிக்கு முதல்வர் 5 லட்சம் நிதியுதவி

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் ‘விளையாட்டு அலுவலர்’ பதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை இவர் தான்.

அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் நிதியுதவி கோரியிருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில் இன்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சத்திற்கான காசோலையை பவானி தேவியின் தாயாரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்காக தனக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘தமிழக முதல்வர் 5 லட்சம் நிதி உதவியை எனது சிறப்பு பயிற்சிக்காக வழங்கியுள்ளார். இது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் பணிபுரியும் மின்துறை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரிய மேலாண்மை இயக்குநருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவரது ஒத்துழைப்பும், ஊக்கமும் எங்களுக்கு உந்துதலை வழங்குகிறது. கடின பயிற்சி எடுப்பதற்கு வழிவகை செய்கிறது. எங்கள் அனைவருக்கும், உங்களுடைய ஒத்துழைப்பும், வாழ்த்தும் தேவை. ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எங்களது செயல்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையுடன், எங்களது பயிற்சியை தொடங்குகிறோம். நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: