மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைகள் !

குழந்தைகள் நல மருத்துவம், கல்லீரல் சிகிச்சை, சிறுநீரகவியல் போன்ற மருத்துவத்தின் பல்வேறு பிரிவுகள் பற்றி நமக்குத் தெரியும். இவற்றில் பரவலாக அறியப்படாத ஒரு மருத்துவம் Physical Medicine and Rehabilitation என்கிற உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத்துறை.  PMR என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் இந்தத் துறையில் தமிழகம் முழுக்கவே சராசரியாக 25 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள்! பி.எம்.ஆர். துறையின் சிறப்பம்சம், மக்களிடமும் மருத்துவர்களிடமும் ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு, இதன் எதிர்காலம் என்று பல்வேறு விஷயங்கள் பற்றி உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவரான நித்யா மனோஜ் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

மருத்துவத்தின் மற்ற துறைகளுக்கும் பி.எம்.ஆர். துறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

‘‘நோயாளியை குணப்படுத்துவதுதான் எல்லா மருத்துவப் பிரிவின் அடிப்படை நோக்கமும். நோயாளி குணமடைந்த பிறகு அவர் மீண்டும் தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதுதான் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு. மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சிகிச்சைகள், அவர்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்களுக்கு கையெழுத்துப் போடுவதற்கான அதிகாரம் கொண்ட சிறப்பு துறை இது தான்.

இத்துடன் எல்லா புனர்வாழ்வு சிகிச்சைகளும் உண்டு.உதாரணத்துக்கு, நரம்பியல் தொடர்பான புனர்வாழ்வு சிகிச்சையை எடுத்துக் கொள்வோம். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரத்தம் கசிந்தால் அதைத் தடுக்க நரம்பியல் மருத்துவர்கள் ஊசி போடுவார்கள். மூளையில் கட்டி இருந்தால் அறுவை சிகிச்சை செய்து பிழைக்க வைத்துவிடுவார்கள்.

நோயாளி உயிர் பிழைத்ததுடன் பிரச்னை முடிந்துவிடுமா, என்ன?

அதன் பிறகு நோயாளிக்கு நினைவு திரும்ப வேண்டும்... பேச்சு வர வேண்டும்... உடலில் சமன்நிலை இருக்க வேண்டும்... மறுபடியும் அவர் வேலைக்குச் செல்ல வேண்டும்... குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும்... இப்படி பல தேவைகள் உண்டே? இதுபோல உயிர் பிழைத்த பிறகு, அவர்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவருவதும் புனர்வாழ்வு மருத்துவம்தான். ‘இப்படி ஒரு துறை இருக்கிறது, இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்பதை மக்கள் தெரிந்துகொள்வது நல்லது.

நோயாளியைக் குணப்படுத்த வேண்டும் என்பதுதான் மருத்துவரின் இறுதி நோக்கமாக இருக்கும். அதனால் மருத்துவர்களுக்கும் இந்த துறையை நம்முடைய நோயாளிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகள் நல மருத்துவமனை என்று சென்னை எழும்பூரில் இருப்பதுபோல, சென்னையில் கே.கே. நகரில் இதற்காகப் பெரிய மருத்துவமனை இருப்பதே மக்களில் பலருக்குத் தெரியவில்லை.’

பி.எம்.ஆர். துறையில் படிக்கிறவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்?

‘‘125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 3 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இதில் 1.5 சதவிகிதம் பேர் உடலியக்க குறைபாடு கொண்டோராக இருக்கிறார்கள். சராசரியாக ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும். ஆனால், இந்திய அளவிலேயே ஆண்டுக்கு 40 மருத்துவர்கள்தான் இந்தத் துறையிலிருந்து வெளிவருகிறார்கள். 1979ம் ஆண்டில் எம்.எம்.சி.யில் இந்தத் துறை தொடங்கப்பட்டது. இந்த 37 ஆண்டுகளில் சராசரியாக 25 மருத்துவர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கிறோம்.

அதனால், தேவை என்பது மிகவும் பெரிய அளவில் இருக்கிறது. ஒருவேளை வருமானம் குறைவாக வருமோ, கிடைக்காதோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கலாம். உண்மையில் வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் கிடைப்பதுடன் மனதுக்கு நிறைவையும் தருகிற துறை இது. எந்தத் துறையாக இருந்தாலும் நம்முடைய தனிப்பட்ட திறமைதான் வெற்றி பெற உதவும். அதனால், வெற்றி என்பது படிப்பைப் பொறுத்தது இல்லை. நாம் எந்த அளவுக்கு ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறோம், எத்தனை சந்தோஷமாக அந்தத் தொழிலைச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!’’

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பார்வை இன்று மாறியிருக்கிறதா?

‘‘பிசிக்கல் மெடிசின் என்பதை பிசியோதெரபிஸ்ட் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். சில மாணவிகள் ஸ்போர்ட்ஸ் மெடிசினாக இருக்குமோ என்றும் நினைக்கிறார்கள். இதுபோன்ற தவறான எண்ணமெல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது எம்.பி.பி.எஸ்., படிக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் பி.எம்.ஆர். துறையில் ஒரு வாரமாவது இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அதனால், நாங்கள் படித்த காலம் போல அல்லாமல் இன்றைய மாணவர்களுக்கு பி.எம்ஆர். பற்றித் தெரிந்திருக்கிறது. இதற்கான தனித்துறையும் எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் உருவாகி வருகிறது. அதனால், இன்னும் 5 வருடங்களில் நிறைய மருத்துவர்கள் உருவாகிவிடுவார்கள்!’’

இதில் வலி நிவாரண மருத்துவம் என்பது என்ன?

‘‘பி.எம்.ஆர். மருத்துவத்தின் ஒரு பகுதிதான் அதிநவீன வலிநிவாரண மருத்துவம் (Interventional Pain Medicine). இதுவும் வளர்ந்து வருகிற, நோயாளிகளுக்குப் பயனளிக்கிற முக்கியமான ஒரு துறை. குழந்தைகள் மருத்துவத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான படிப்பு இருப்பதுபோல உடலியல் மருத்துவத்தில் வலிநிவாரணம் என்பது ஒரு தனி துறை!’’

இதில் என்னென்ன பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?

‘‘எலும்பாலோ, தசையாலோ, நரம்பாலோ வலி ஏற்படலாம். வலிக்கான காரணம் அறிந்து எளிதில் குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளை இதில் செய்ய முடியும். ஃப்ரோஸன் ஷோல்டர் என்ற தோள்பட்டையைத் தூக்கினால் ஏற்படும் வலி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கு மாத்திரைகள், பிசியோதெரபி என்று வழக்கமான சிகிச்சைகள் உண்டு. இன்டர்வென்ஷனல் முறையில் இதே பிரச்னைக்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. தோள்மூட்டைச் சுற்றியிருக்கும் சதையின் இறுக்கம் தளர்வதற்கான ஊசி உண்டு.

இந்த ஊசியை நரம்பில் செலுத்துவதன் மூலம் மூட்டு சவ்வுகளைப் பிரித்து இறுக்கத்தைக் குறைக்கலாம். 6 மாதம் பயிற்சிகள் செய்து கைகளை மேலே தூக்கும் நிலையை ஊசியின் மூலம் 3 நாட்களில் கொண்டுவந்துவிடலாம். இதன்மூலம் நேரமும் மிச்சமாகிறது. வலியையும் தவிர்க்க முடியும். இதை இன்டர்வென்ஷனல் மருத்துவர்கள்தான் செய்வார்கள். 40 வயதுக்கு மேல் மூட்டின் சவ்வு தேய்ந்து மூட்டுவலி ஏற்படும். இந்த பிரச்னைக்கு மாத்திரைகள் கொடுப்பார்கள். மூட்டு முழுவதுமே வளைந்தால் மூட்டுமாற்று சிகிச்சை செய்வார்கள்.

இதைத் தவிர்க்க SFRT என்ற எளிய சிகிச்சை இருக்கிறது. சவ்வுகளுக்கு இடையில் இருக்கும் திரவத்தை ஊசியின் வழியாக செலுத்தும் முறை இது. இதன்மூலம் எலும்பு மூட்டுகள் உராய்வது தவிர்க்கப்பட்டு வலியும் குறைந்துவிடும். பிரச்னை இன்னும் மோசமான நிலைக்குச் செல்லாமலும் தடுத்துவிட முடியும். தினமும் மாத்திரை சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக் கொண்டால் போதும். இதற்கு மயக்க மருந்து தேவையில்லை. அட்மிட் ஆக வேண்டியதில்லை. வழக்கமான ஊசியைப் போல முட்டியில் போட்டுக் கொண்டால் போதும்.

சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் பற்றாக்குறைக்கு ஊசி போட்டுக் கொள்வது போன்றதுதான் இது. ஸ்டீராய்டு ஊசி அல்ல என்பது முக்கியமானது. மைக்ரேன் தலைவலிக்கு Botox ஊசியைப் பயன்படுத்தும் முறையும் இருக்கிறது. முகச்சுருக்கத்தைப் போக்கப் பயன்படுத்தும் இந்த போடாக்ஸ் ஊசியை ஒற்றைத் தலைவலியை நீக்கவும் பயன்படுத்தலாம். தலைவலிக்கு அடிப்படையான காரணம் தசைகள் இறுக்கமடைவதுதான்.

இதுபோல தலைவலியை உருவாக்கும் 33 இடங்கள் தலையில் இருக்கிறது, அதைக் கண்டறிந்து தசை இறுக்கத்தைக் குறைப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்தலாம். வருடக்கணக்காக மாத்திரைகள் சாப்பிடுகிறவர்கள் இந்தச் சிகிச்சையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல முழங்கை வலிகள், பாதவலிகள், கணுக்கால் வலிகள் போன்ற பிரச்னைகளுக்கு நோயாளியின் ரத்தத்தில் இருக்கும் Repairing Serum உதவியுடனே மூட்டுகளுக்கு ஊசி போட்டு சரி செய்யலாம். இதுபோல வலி சம்பந்தமான பல பிரச்னைகளுக்கும் இந்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.’’

சொல்ல விரும்பும் விஷயம்…

‘‘குழந்தைகளின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது முதல் 2 ஆண்டுகள். இந்தக் கால கட்டத்தில் பெற்றோரும், குழந்தைகள் நல மருத்துவர்களும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால் சாதாரணமாக நினைக்கக் கூடாது. எத்தனை சீக்கிரமாக ஒரு சிறப்பு மருத்துவரைப் பார்க்கிறோமோ அந்த அளவுக்கு ஒரு குழந்தையை நோயாளியாக மாற்றாமல் முன்னரே தடுத்துவிடலாம்...’’

- ஜிஸ்ரீவித்யா

× RELATED சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் வீணாக அலைக்கழிப்பு