கூட்டுறவு சங்க முறைகேடுகள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் முறைகேடுகள் குறித்து விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.  நங்கநல்லூர் கூட்டுறவு பண்டக சங்கத்தின் சார்பில் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பெட்ரோல் நிலையத்தை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நங்கநல்லூரில் கூட்டுறவுத்துறை மூலம் பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. 1964ல் கட்டப்பட்ட கட்டிடங்களில் நியாயவிலை கடைகள் இயங்கி வருகின்றன. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்துள்ள புகார்கள் குறித்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் யார் யார் என அறிந்து அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: