திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணனூர் ரயில்வே மேம்பால பணி நிறைவு: அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு

ஆவடி: திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணனூர் ரயில்வே மேம்பால பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்த மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் அண்ணனூர் ரயில்வே கேட் உள்ளது. சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு ஊழியர்கள் என தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் அயப்பாக்கம், திருவேற்காடு, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டும். இந்த ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் தண்டவாளத்தை கடப்பவர்களால் கடந்த சில ஆண்டுகளில் ரயிலில் அடிப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். எனவே, இங்கு ரயிவே மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில், இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும். இதனால் உயர்மட்ட மேம்பாலம் தான் அமைக்க முடியும் என தீர்மானித்தனர்.  இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து திருமுல்லைவாயல் - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 2006ம் ஆண்டில் 15.6 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கினர்.  இதற்கான பணிகள், கடந்த 2010ம் ஆண்டு ரயில்வே பாதை குறுக்கே தொடங்கி நடைபெற்றது. மேலும், கடந்த 2012ம் ஆண்டு ரயில்வே தண்டவாள பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியும் முடிவடைந்துவிட்டது. பின்னர், மாநில அரசு செய்ய வேண்டிய மேம்பால பணிகள் ஆரம்பிக்கப்படாமல் கடந்த  6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதனை விரைந்து தொடங்க கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தனர்.

துறை அதிகாரிகள் ஆய்வில், 2006ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பீட்டை விட கூடுதல் நிதி தேவைப்பட்டதும், அயப்பாக்கம், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட நிலம் கையெடுப்பு பணிகளுக்கு அதிக நிதி தேவைப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, 2017ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் கட்ட 27 கோடியும், நில கையெடுப்பு பணிக்கு 25 கோடியும் சேர்ந்து 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2017ம் ஆண்டு செப்டம்பரில் மேம்பால பணிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், நிலம் கையெடுப்பு, மேம்பால மறு வடிவமைப்பு பணிகளால் கால தாமதம் ஏற்பட்டது. பின்னர், இப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டது. தற்போது, மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மேலும், அணுகுசாலை, பால முடிவில் தார் சாலை போடும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. மேம்பாலத்தில் வர்ணம் பூசும் பணிகளும் நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும் விரைவில் மேம்பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

95 சதவீத பணி முடிந்தது

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இப்பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரு புறமும் 648.778 மீட்டர் நீளம், 7.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 35 ஓடு தளங்கள் கொண்டவையாகும். ஓடு தளத்திற்கு இடைப்பட்ட நீளம் 16.5 மீட்டராகும். இந்த பாலத்தின் அணுகுசாலை திருமுல்லைவாயல் பகுதியில் 296.415 மீட்டரும், அயப்பாக்கம் பகுதியில் 151.937 மீட்டரும் கொண்டதாகும். மேம்பால பணிகள் போது 95% முடிந்து விட்டது. இப்பாலம் அடுத்த மாதம் (ஜூலை) மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,” என்றனர்.

மக்களின் கனவு திட்டம்

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களின் கனவு திட்டமான இந்த மேம்பாலம் தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். திருமுல்லைவாயல், அண்ணனூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சி அடையும்,” என்றனர்.

Related Stories: