நிதி நிலை குறித்து 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை பெட்ரோல், டீசல் வரியை குறைக்க முடியாததற்கு ஒன்றிய அரசே காரணம்: நிதியமைச்சர் தியாகராஜன் பேட்டி

சென்னை: அடுத்த 2 வாரங்களில் தமிழக அரசின் நிதி நிலை குறித்து  வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாததற்கு ஒன்றிய அரசே காரணம் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முயற்சி செய்வோம் என கூறியிருந்தோம். ஏன் வரியை குறைக்க வில்லை என்று சிலர் கேட்கின்றனர். கண்டிப்பாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்போம். ஆனால், அது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஏனென்றால், 2014ல் ஒன்றிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் 39 பைசா இருந்த வரியை 32 ரூபாய் 90 பைசாவாக பெட்ரோலுக்கு உயர்த்தியுள்ளது.

3 மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியது. 10 ரூபாயாக பெட்ரோல் மீதான வரி இருந்த போது 45 சதவீதம் வரி மாநிலங்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால், இன்றைக்கு ஒரு பைசா கூட தராமல் ஒன்றிய அரசே மொத்தமாக எடுத்து கொள்கிறது. இதனால் ஒன்றிய அரசின் நிதி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியில் இருந்து 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி அதாவது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலங்களுக்கான நிதி குறைந்துவிட்டது. தமிழகத்துக்கான வருவாய் 336 கோடி குறைந்துள்ளது. இதனால் ஒன்றிய அரசால் மாநில அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தசூழ்நிலையில், நாம் வரியை குறைத்தால் அது ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும், வரியை அதிகரிக்கவும் வழிவகுத்துவிடும்.  மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு வரியாக 1 ரூபாய் சென்றால், அதில் பாதி கூட தமிழகத்துக்கு வருவதில்லை.

கச்சா எண்ணெய் பேரலுக்கு 44 டாலராக உள்ளது. ஆனால், பெட்ரோல் ஒரு லிட்டர் 98. இதில் 23 தமிழகத்தினுடையது.  70 ரூபாய் உற்பத்தி மற்றும் ஒன்றிய அரசாங்கத்தினுடையது. உத்தர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம் , திரிபுரா போன்ற மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு வரியாக 1 ரூபாய் கொடுத்துவிட்டு 10 ரூபாயாக வாங்குகின்றனர். இப்போதைய  ஒன்றிய அரசு, செஸ் வரி என்று போட்டு 3 மடங்கு அதிகரித்து 4 லட்சத்து 50 ஆயிரம் கோடியை செஸ் வரி மூலம் சம்பாதித்துள்ளது. நம் வரி பணத்தை நமக்கு கொடுக்காமல் வைத்துக்கொள்கிறது. இந்த பணத்தை வைத்துதான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. 32 ரூபாய் பெட்ரோலில் வரி போட்டால் அதில் 1.50 பைசா தான் பகிர்ந்து கொடுக்கிறார்கள்.

இதனால் தான் எங்களால் உடனடியாக பெட்ரோல், டீசல் வரியை உடனடியாக குறைக்க முடியவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த வாக்குறுதியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், ஒன்றிய அரசின் அநியாயத்தை திருத்தி நிறைவேற்றுவோம். இந்த அளவிற்கு மாநில உரிமை, அதிகாரம், நிதியை பறிப்பதை வரலாற்றில் பார்த்தது இல்லை.இவ்வாறு கூறினார்.

அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது

தமிழக நிதியமைச்சர் பேசுகையில், அதிமுக அரசு 4.85 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக தவறாக கூறியிருக்கிறது. 5 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் மோசமாக நிதிநிலை இருக்கிறது. நாங்கள் 10 வருடத்திற்கு பிறகு தற்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எனவே, வெள்ளை அறிக்கை வெளியிடப்போகிறோம். ஒரு வருடத்தில் உற்பத்தியில் மூன்றரை சதவீதம் வருமானத்தை இழந்துவிட்டோம். வருவாயில் 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை முதலில் திருத்த வேண்டும். நிறைய தவறு நடக்கிறது. அடிப்படையில் கடந்த 5 வருடங்களாக சரியான தலைமை இல்லாததால் வருவாய் குறைந்துள்ளது. தவறுகளை திருத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Related Stories: