கோயில் கணக்கு விவரங்கள் இணையதளத்தில் ஜூலை 1ல் வெளியீடு: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலின் வரவு-செலவு கணக்குகள் ஜூலை 1ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 44,120 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளது. இதில்  கட்டிடங்கள்  பெரும்பாலானவை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நிலங்களில் 1.78 லட்சம் ஏக்கர் மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்ற நிலங்கள் எந்தவித பயன்பாட்டிற்கும் இல்லாமல் கிடந்ததால்  சமூகவிரோதிகள் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, கோயில் நிலங்கள் மற்றும் அதன் உரிமை ஆவணங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில்களின் வரவு செலவு விவரங்கள் அந்தந்த கோயில்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். இதனால் பெரும்பாலானோருக்கு கோயில்களில் வரவு செலவு விவரங்கள் தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக ஜூலை 1ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார். இதில், கோயில்களில் ஆண்டு தோறும் வரக்கூடிய வருமானம், ஏற்படக்கூடிய செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் இடம் பெற்றிருக்கும். தற்போது இந்த விவரங்களை அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், ஒவ்வொரு கோயில்களில் கேட்டு பெறும் பணியில் உதவி ஆணையர்கள், இணை ஆணையர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.

Related Stories: