மீன்பிடி தடைக்காலம் முடிந்ததன் எதிரொலி காசிமேடு துறைமுகத்தில் மீன்வாங்க குவிந்த மக்கள்: வலையில் குறைந்த அளவே சிக்கியதால் எகிறியது மீன் விலை

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு துறைமுகத்தில் நேற்று மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவில் மீன்கள் கிடைத்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று தான்முதல் ஞாயிற்று கிழமை துவங்கியது. இதனால், விதவிதமான மீன்கள், குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மொத்த, சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் காசி மேடு துறைமுகம் வந்தனர்.ஆனால், மீன்கள் விலை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

இது குறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும் தடைக்காலம் முடிந்ததும் 40 சதவீதம் படகுகள் மீன்பிடிக்க செல்லும். ஆனால், பல்வேறு பிரச்னைகளால் இந்த ஆண்டு சுமார் 2 முதல் 5 சதவீதம்  விசைபடகுகளில் மட்டும் மீன்பிடிக்க சென்றார்கள். அப்படி சென்ற மீனவர்களுக்கு சென்னை மற்றும் அடுத்து உள்ள பகுதிகளில் போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை. ஆழ்க்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. குறைவான அளவிலேயே மீன்கள் கிடைத்ததால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

மீன்பிடி தடைகாலத்திற்கு முன்னர் வஞ்சிரம் மீன்(1 கிலோ) 550க்கு விற்றது இதுதற்போது 750 800க்கும், கறுப்பு வவ்வால் 450லிருந்து 530,சங்கரா 300லிருந்து 410, நண்டு 220லிருந்து 300 ஆக விலை உயர்ந்துள்ளது.ஆழ்கடல் மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு 1 மாதம் 1800 லிட்டர் மானியவிலையில் டீசல் வழங்கப்படுகிறது.இதனை 5000 லிட்டராகவும், பைபர் படகுகளுக்கு 350 லிட்டர் என்பதை  1000 லிட்டராகவும் உயர்த்திவழங்க வேண்டும்.

Related Stories: