முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக மே 11ம் தேதியும், சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்காக மே 12ம் தேதியும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

வழக்கமாக புதிய அரசு பதவியேற்றதும், கவர்னர் உரை, அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டம், மானிய கோரிக்கை நிறைவேற்றுதல் உள்ளிட்டவைகளுக்காக சட்டப்பேரவை கூடுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அரசின் அதிரடி நடவடிக்கையால் கொரோனாவின் பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் 21ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த 9ம் தேதி அறிவித்தார். அதன்படி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார். கூட்டத்தொடருக்கு வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேரவை முறைப்படி அழைத்து வந்து இருக்கையில் அமர வைப்பார்கள். கூட்டம் தொடங்கியதும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் ஆற்றுவார். அவர் உரையாற்றிய பின்னர் அவரின் ஆங்கில உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அவர் வாசித்து முடித்ததும் அன்றை கூட்டம் நிறைவடையும்.

ஆளுநர் உரையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது. மேலும் மேகதாது அணை விவகாரம், அரசுக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகை குறித்தும் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பிச்சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். அப்போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக சட்டமன்ற கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின், அடிப்படையில் பேரவை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து கடைசி நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுவார். அத்துடன் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நிறைவடையும். சில நாட்கள் இடைவெளிக்கு பின், ஜூலை வாக்கில் 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக மீண்டும் கூட்டம் கூடும். அப்போது, நிதிநிலை குறித்து தமிழக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நீட் உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து அரசு தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என கூறப்படுகிறது.

கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: