விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றன்ர். சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையப் பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த குண்டு  மதியத்துக்குள் வெடித்து சிதறும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து விமானநிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விமானநிலைய மேலாளர் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான முனையப் பகுதி, கார் பார்க்கிங் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் அது புரளி எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விமானநிலைய மேலாளர் அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மீனம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மிரட்டல் போன் பழவந்தாங்கல் பகுதியில் இருந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில்  பழவந்தாங்கலில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அருள் ராபர்ட் (28) என்ற வாலிபரை பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.  விசாரணையில், சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: