வத்திராயிருப்பு அருகே வாலிபர் வெட்டி கொலை; கிராம மக்கள் போராட்டம்: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதால் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ராமசாமியாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (22). கூலி தொழிலாளி. நேற்றிரவு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது இதே பகுதியை தாமரை (37) என்பவர் அரிவாளால் சரமாரியாக சுந்தரமகாலிங்கத்தை வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள் சுந்தரமகாலிங்கம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையறிந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ராமசாமியாபுரத்தில் இன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுந்தரமகாலிங்கத்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்பி மனோகரன், டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். தங்களது கோரிக்கைகளை தாசில்தார் மாதாவிடம் மனுவாக அளித்தனர். இதற்கிடையே, வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரையை கைது செய்தனர். சுந்தரமகாலிங்கம், தாமரை ஆகியோர் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் ராமசாமியாபுரத்தில் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்பு பணிக்காக 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: