ரயில்வே துறையால் புறக்கணிக்கப்படும் பழநி: வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்

பழநி: ரயில்வேதுறையால் பழநி புறக்கணிக்கப்பட்டு வருவதால் வளர்ச்சி திட்டங்கள் முடங்கி உள்ளன. தென்னிந்தியாவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநில பக்தர்களின் வருகையால் உள்ளூர் வணிகர்களும், சிறு வியாபாரிகளும் பெரிதும் பயனடைகின்றனர். தற்போது பழநி வழித்தடத்தில் பாலக்காடு, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது.

பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கினால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளிமாநில பக்தர்களளும் சிரமமின்றி வந்து செல்ல வாய்ப்பாக அமையும். இதன் காரணமாக பழநி, பொள்ளாச்சி வழித்தடங்களில் திண்டுக்கல்-போத்தனூர், திண்டுக்கல்-பாலக்காடு ரயில் தடங்கள் மின்மயமாக்கப்படுமென ரயில்வேதுறை அறிவித்திருந்தது. இதனால் பழநி மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். தற்போது இவை அறிவிப்புகளோடு நின்றுவிட்டன. ரயில்வேதுறையின் புறக்கணிப்பால் பழநி மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து ரயில் உபயோகிக்ப்பாளர் சங்க தலைவர் முருகானந்தம் கூறியதாவது: கடந்த 4ம் தேதி வெளியான தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் பொள்ளாச்சி-போத்தனூர், பழநி-பாலக்காடு ரயில் தடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. பழநி-திண்டுக்கல் வழித்தட மின்மயமாக்கம் விடுபட்டுள்ளது. இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கர்நாடக வழியாக மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களை பழநியில் இணைக்கும் பழநி-ஈரோடு வழித்தட திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழநி-திண்டுக்கல் ரயில்வழி தடம் மின்மயமாக்கத்தில் இவ்வருடம் இடம்பெறாதது தென்னக ரயில்வே பழநியை ஒதுக்கிறதோ என்ற சந்தேகத்தை  ஏற்படுத்துகிறது.

 பழநி கோயிலின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு பழநி-திண்டுக்கல் ரயில் வழித்தடத்தை இந்த வருடத்திலேயே முடிக்க எம்பிக்கள் மற்றும் தமிழக அரசு, ரயில்வேதுறையை வலியுறுத்த வேண்டும். இதுபோல் பழநி வழியாக சென்னை, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கொச்சின், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு அதிக ரயில்களை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: