கொரோனாவால் இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரீபக் கான்சல் என்பவரால் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திநருக்கு மத்தியஅரசின் விதிமுறைகளின்படி உடனடியாக நிவாரண உதவி வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தங்களுடைய குடும்ப உறுப்பினர் எந்த நோயால் உயிரிழந்தார், இறப்புக்கான காரணம் என்ன என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவண அடிப்படையில் அறிந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், கொரோனாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு உடற்கூறு ஆய்வு செய்து கொரோனாவில்தான் உயிரிழந்தார்களா? என்று மருத்துவர்கள் சான்று ஏதும் அளிக்கவில்லை. எந்த உடற்கூறு ஆய்வும் செய்யப்படவில்லை. ஆதலால், உயிரிழந்தவர் எவ்வாறு உயிரிழந்தவர் , எந்த காரணத்தால் உயிரிழந்தார் என்பது குறித்த இறப்புச் சான்றிதழையும், அல்லது கடிதத்தையும் அந்தந்த மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கிடஉத்தரவிட வேண்டும். தேசிய பேரிடர் மீட்பு நிதி, மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசு செய்த திருத்தப்பட்ட பட்டியல், விதிகளின்படி, 2005,பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும்’என்று கூறப்பட்டது. இம்மனுவை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அசோக் பூஷான், எம்.ஆர். ஷா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொரோனாவால் இறந்த ஒவ்வொரு நபரின் உறவினர்களுக்கும் ரூ .4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது. கடந்த ஓராண்டுக்கு மேலாக தொற்றுநோயை எதிர்த்துப் மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இதற்காக, பெரும் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலவிட்டுள்ளன. எனவே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது’ என்ற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>