அங்கீகரிக்கப்பட்ட 4 தடுப்பூசிகளில் 2 ‘டோஸ்’ போட்டவருக்கு துபாயில் அனுமதி: இந்திய பயணிகளுக்கான தடை நீக்கம்

துபாய்: அங்கீகரிக்கப்பட்ட 4 தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவருக்கு துபாய் வர அனுமதிக்கப்படுகிறது. இந்தியா உள்பட 3 நாடுகளுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலையால், கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரசு அமீரகத்திற்கு இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது, கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கான தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், துபாய் நாட்டின் பேரிடர் முகமையின் உயர்மட்ட ஆலோசனை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து துபாய் வரும் பயணிகளுக்கான தடை தளர்த்தப்படுகிறது.

மேலும், சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதால், வரும் 23ம் தேதி  முதல் அந்த நெறிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளைப் போட்டிருக்க வேண்டும். குடியிருப்பு விசா பெற்றுள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் சினோபார்ம், ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் -5,  ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கொடுத்துள்ளது.

துபாய் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னர் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், தங்களது பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட சான்றை வழங்க வேண்டும். அவர்கள் துபாய்க்கு வந்ததும் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். தேவைப்பட்டால், தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படும். இந்த விதிமுறைகள் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கியூஆர் குறியீடு மூலம் பி.சி.ஆர் சோதனை சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Related Stories:

>