பாஜகவை பணபலம் சூழ்ந்துள்ளது: நடிகர் சத்ருகன் சின்ஹா பேட்டி

புதுடெல்லி: பாஜகவில் தனிநபர் பிரசாரம்தான் நடப்பதாகவும், இன்றைய பாஜகவை பண பலம் சூழ்ந்துள்ளதாக நடிகர் சத்ருகன் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, ​​சினிமா மற்றும் அரசியல் தளங்களில் தனது அடையாளத்தை பதித்துள்ளார். கடந்த 2009 முதல் 2019ம் ஆண்டு  வரை பாட்னா சாஹிப் தொகுதி எம்.பி.யாக இருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல திட்டமிடல் அமைச்சராகவும் பணியாற்றினார். பாஜகவில் பல ஆண்டுகள் இருந்த நிலையில், தற்போது அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், ‘சித்தி பாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு ‘சீட்’ கொடுக்காததால், நான் கட்சியை விட்டு வெளியேறியதாக கூறுகின்றனர். ஆனால் அப்படி கூறுவது. கடந்த 35 ஆண்டுகளாக அதே கட்சியில் பல தளங்களில் பணியாற்றி உள்ளேன். நாட்டைக் காட்டிலும் தனிநபர் முக்கியமில்லை என்பது எனது சித்தாந்தம். ஆனால், இன்றைய பாஜகவில் நடப்பதை எதிர்த்து கட்சிக்குள் இருந்தே போராட முடிவு செய்தேன். ஆனால், எனது கருத்து ஏற்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் பாஜக இருந்ததற்கும் தற்போது உள்ள பாஜகவுக்கு நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இப்போது, பாஜகவில் தனிநபர் பிரசாரம்தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. பண பலம் கொண்ட சிலர், கட்சியை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதனை மூடி மறைக்க, சிலர் கட்சியைச் சூழ்ந்துகொண்டு பணியாற்றுகிறார்கள். ஊடகம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் பாஜக தனது கட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறது. காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்திற்கு பெரும் பங்களிப்பு  அளித்த கட்சி. அதனால், அந்த கட்சியில் இணைந்தேன்’ என்றார்.

Related Stories: