பூண்டி நீர்த்தேக்கத்தில் 2 மதகுகள் சீரமைப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 2 மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் நீர்கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மதகுகள் சீரமைக்கும் பணி மீண்டும் துவங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள 16 கதவணைகளில் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு மணல்வாரி கதவணைகளும் பழைய கதவணைகள் என்பதால் சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் சில நாட்களுக்கு முன் மேற்கொண்டனர். இந்த நிலையில், கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

எனவே நீர்த்தேக்கத்தின் அணையின் பாதுகாப்பு நலன் கருதியும் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு மதகுகள் சீரமைக்கும் பணிகளை தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்தவுடன் மீண்டும் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு மதகுகள் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்போது நீர்க்கசிவு ஏதும் இல்லாமல் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 205 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 250 கன அடி வீதம் தற்போது அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 15ம் தேதி கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணாநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டிக்கு 420 கனஅடி நீர் வருகிறது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் 6563 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு  உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: