திருடுபோன பணம், செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்ட துப்புரவு பணியாளருக்கு அடி?.. புளியந்தோப்பு போலீசாரிடம் விசாரணை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பஜனை கோயில் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (52). ஐசிஎப் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 16ம்தேதி கோவிந்தனின்  மகளுக்கு குழந்தை பிறந்து இருப்பதால் அனைவரும் மகள் வீட்டுக்கு சென்றனர். கோவிந்தன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அன்றிரவு தூங்கிவிட்டு மறுநாள் காலை எழுந்து வந்தபோது,  வீட்டின் பூஜை அறையில் இருந்த ₹40 ஆயிரம், 12 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது 2 பேர் கோவிந்தன் வீட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றதும் புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோவிந்தன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த சிறுவனை பிடித்து புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.  போலீசார் சிறுவனிடம் விசாரணை செய்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி  கோவிந்தனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நேற்று காவல்நிலையம் சென்று கோவிந்தன் கேட்டுள்ளார். அதற்கு போலீசார்,  சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டோம். திருடுபோன பொருட்கள் பற்றி எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர். வீட்டுக்கு வந்த கோவிந்தன் இதுகுறித்து தனது நண்பனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, நண்பர் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே,  புளியந்தோப்பு குற்றப்பிரிவுக்கு போலீஸ் கன்ட்ரோல் ரூமில் இருந்து போன் செய்து வழக்கை முறையாக விசாரிக்கும்படி எச்சரித்ததாக தெரிகிறது.

இதையடுத்து கோவிந்தனை காவல் நிலையம் அழைத்த குற்றப்பிரிவு போலீசார், அவரை  கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பணமும் வேண்டாம், செல்போனும் வேண்டாம் என துப்புரவு பணியாளர் கோவிந்தன் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>