வீட்டில் பதுக்கிய 200 கிலோ கஞ்சா பறிமுதல்

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டில் மூட்டை மூட்டையாக பதுக்கிய 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை பகுதியை சேர்ந்தவர் முகமது அஜேஸ். கடந்த ஜனவரி மாதம் அருமனை அருகே அண்டுகோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து உள்ளார். தொடர்ந்து மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். அக்கம் பக்கத்தினரிடம் வாகன உதிரிபாகங்கள் வியாபாரம் செய்து வருவதாக கூறி வந்து உள்ளார். பின்னர் ஒரு மாதத்தில் மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் தனியாக வீட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா வியாபாரம் நடப்பதாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதற்கிடையே நேற்று இரவு அண்டுகோடு பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ணிப்பாலம் அருகே ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அதில் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் முகமது அஜேஸ் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: