சூளைமேட்டில் கடத்தப்பட்ட காதலியின் உறவினர் மீட்பு: 3 பேருக்கு வலை

அண்ணாநகர்: சூளைமேட்டில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், பெண்ணின் உறவினரை காதலன் காரில் கடத்தி சென்றார். கடத்தப்பட்ட உறவினரை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு, மங்கள நகரை சேர்ந்தவர் சிராஜ் பாஷா (55). இவரது மனைவி பாத்திமா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தனது மகன் தஸ்லின் பாஷா, மகள் ஆயிஷா பேகம் ஆகியோருடன் இந்த வீட்டில் சிராஜ் பாஷா வசித்து வருகிறார். இந்நிலையில், பாத்திமாவின் தங்கை மகள் தில்சாத் பேகம் (21) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக சென்னை இசிஆர் பகுதியில் உள்ள வருண் (26) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் தில்சாத் பேகத்திடம், அந்த பையன் (வருண்) முஸ்லிம் மதத்துக்கு மாறினால் திருமணம் செய்து தருவதாக தஸ்லின் பாஷா கூறியுள்ளார். இதை வருண் ஏற்கவில்லை. மேலும், வேலூரை சேர்ந்த தவ்பீக் என்பவருக்கு தில்சாத் பேகத்தை திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளில் தஸ்லின் பாஷா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு பெண் மூலமாக வருண் செல்போனில் தொடர்பு கொண்டு, அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி அருகே தஸ்லின் பாஷாவை வரவழைத்தார். பின்னர் அவரை தனது நண்பர்கள் உதவியுடன் வருண் காரில் கடத்தி சென்று, ஒரு மறைவான இடத்தில் சிறை வைத்துள்ளார்.

இதற்கிடையே தனது தங்கை ஆயிஷா பேகத்துக்கு போன் செய்து, சித்தி மகள் தில்சாத் பேகத்தை நான் சொல்லும் இடத்துக்கு வரச் சொல்லுங்கள். இல்லையெனில் என்னை வருண் கொலை செய்துவிடுவதாக கூறுகிார் என தஸ்லிம் பாஷா கூறியுள்ளார். இந்த நிலையில் தஸ்லின் பாஷா தனது தங்கை ஆயிஷாபேகத்திற்கு போன் செய்து, வருண் தன்னை கடத்தி சிறை வைத்திருப்பதாகவும், சித்திமகள் தில்சாத்பேகம் நான் சொல்லும் இடத்துக்கு வரவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என வருண் மிரட்டுவதாகவும் தஸ்லின் பாஷா தெரிவித்துள்ளார். இப்புகாரின்பேரில் சூளைமேடு போலீசார் விசாரித்தனர்.

மேலும், தஸ்லின் பாஷாவின் செல்போன் நம்பர் மூலம் சோதித்தபோது, அவர் கல்பாக்கம் அருகே கொய்யாதோப்பு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று அப்பகுதிக்கு சென்று தஸ்லின் பாஷாவை மீட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தஸ்லிம் பாஷாவை காரில் கடத்திய வருண், அவரது நண்பர்கள் தமிழ், வினோத் ஆகிய 3 பேர்மீது 4 பிரிவுகளின்கீழ் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: