நாடு முழுவதும் இன்றும் விலையேற்றம்; பெட்ரோல், டீசல் விலை ஒன்றரை மாதத்தில் ரூ6 உயர்வு: மக்களை வதைக்கும் ஒன்றிய அரசு

சேலம்: நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ6 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் முறையே 26, 27 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. விலையேற்றத்தால் மக்கள் அடைந்துள்ள பாதிப்பை மத்திய பாஜ அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு தங்களை வாட்டி வதைப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது.

நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ100ஐ எட்டிவிட்டது. டீசல் விலை ரூ98ஐ கடந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ3.33ம், டீசல் விலை ரூ4.15ம் அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தை பொருத்தவரை கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரை உள்ள 20 நாட்களில் 10 நாட்கள் விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ2.41ம், டீசல் ரூ2.47ம் உயர்ந்துள்ளது.

இதன்மூலம் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ5.74ம், டீசல் ரூ6.62ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பெட்ரோல் விலை 23 முதல் 27 காசும், டீசல் விலை 24 முதல் 28 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் ரூ98.14க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 26 காசு உயர்ந்து ரூ98.40க்கு விற்கப்பட்டு வருகிறது. டீசல் ரூ92.31ல் இருந்து 27 காசு உயர்ந்து ரூ92.58க்கு விற்கப்படுகிறது. இதுவே சேலம் மாவட்ட பகுதியில் நேற்றைய தினம் ரூ98.57க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்ட நிலையில், இன்று 25 காசு உயர்ந்து ரூ98.82 ஆக விற்கப்படுகிறது.

டீசல் விலை ரூ92.76ல் இருந்து 26 காசு உயர்ந்து ரூ93.02 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாநகர பகுதியில் பெட்ரோல் ரூ99.21க்கும், டீசல் ரூ93.30க்கும் விற்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 100க்கும் அதிகமான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ100ஐ எட்டி விட்டது. டீசல் விலையும் ரூ98ஐ கடந்திருக்கிறது. இப்படி மிக அதிகபட்ச விலையை கொடுத்து பெட்ரோல், டீசலை மக்கள் வாங்கும் நிலையில், இவ்விலையேற்றத்தை மத்திய பாஜ அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் பாஜ அரசு பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டங்களை நடத்தியநிலையிலும், விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள், மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அரசு தங்களை வாட்டி வதைப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: