சாதனை படைப்பதன் உளவியல் ரகசியம் !

சாதனைக்குப் பின்னால் உள்ள அறிவியல் என்னவென்று உளவியல் நிபுணர் ராமனிடம் கேட்டோம்…ஒருவருடைய வெற்றியானது அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை; எப்படி செய்கிறார் மற்றும் ஆர்வம் குன்றாமல் அந்த வேலையை எப்படி தொடர்கிறார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. அடுத்து, ஒரு   வெற்றியாளன் தன்னுடைய தடையில்லா பயணத்தைத் தொடர,தனிப்பட்ட ஆளுமைப்பண்புகள் மற்றும் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் அவசிய மாகிறது.  இதோடு, தடைகள் பல வந்தாலும் தான் மேற்கொண்ட பணியை விடா முயற்சியுடன் தொடர்ந்தால் மட்டுமே அவனால் இலக்கை அடைய முடியும்.

நம்பு... திட்டமிடு...உன்னால் முடியும்!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் அதை நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், அச்செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றிய நேர்மறையான எண்ணங்கள் ஒருவருக்கு இருக்குமானால், அந்த குணங்களே அவருடைய பணியில் உந்துசக்தியை அதிகரிக்கும். சாதனைக்குப் பின்னால் உள்ள அறிவியல் நம் அனைவருக்குமே நேரத்தை திட்டமிடுவது அவசியம் என்றாலும், வெற்றியாளர்களோ, ஒரு நாளின், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக சாதூர்யமாகத் திட்டமிடுகிறார்கள். ‘ஒரு நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளும்போது, வாழ்க்கையைச் செதுக்கும் ஆற்றலைப் பெற முடியும்’ என்பதை அவர்களின் பழக்கங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்.

அதிகாலை எழு

‘அதிகாலையில்  எழுந்து ஒரு நாளைத் தொடங்கும் நபர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாகவும், வாழ்க்கையில் மிகவும் பொறுப்பாளராகவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும் இருக்க முடியும்’ என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன. இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், பிரதமர், அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் அனைவருமே அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், அதிகாலையில் மனிதனின் உற்பத்தித்திறன் மற்றும் ஆற்றல் நிலை அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் அன்றைய நாளை எளிதாக்கிவிடும். நேரத்தை திட்டமிட்டு சேமிக்காதிருப்பதே, இன்று பலர் வேலையை அரைகுறையாக முடிப்பதற்கும்,தள்ளிப்போடுவதற்கும் காரணமாகிறது.

உடற்பயிற்சி அவசியம்

விளையாட்டு வீரர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்குமானது உடற்பயிற்சி என்று நினைப்பது தவறு. மிகப்பெரிய சாதனையாளர்கள் பின்பற்றும் பழக்கங்கள் பற்றி அமெரிக்க உளவியல் ஆய்வாளரான லாரா வான்டர்கம் எழுதியுள்ள கட்டுரையில், ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அந்த அளவு மன ஆரோக்கியத்துக்கும் தேவை. உடற்பயிற்சிகளை வழக்கமாக செய்யும்போது, கவனிக்கும் திறன் அதிகரித்து, பிரச்னைகளைத் தீர்க்கவும், நெருக்கடிகளை சமாளிப்பதற்குமான ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்’.

போதிய ஓய்வு

‘வேலை அழுத்தம் ஒருவருடைய அறிவுகவனம் மற்றும்உணர்வுகளை சிதைத்துவிடும். வேலைக்கு நடுவே செய்யும் சிறு உடற்பயிற்சிகள், யோகா அல்லது தேநீர் இடைவெளி போன்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் வேலை இறுக்கத்தை குறைத்து படைப்பாற்றலை தூண்டுகிறது.

பயணம்

கடினமான திட்டம் ஒன்றை செயல்படுத்தும்போது, மிக அழுத்தமான உணர்வு ஏற்படுவது இயல்பு. அதற்கு நல்ல மாற்று, ஒரு இனிய பயணத்தை மேற்கொள்வது. பிரபலங்கள் எவரும் தங்களுக்குப் பிடித்த தொலைதூரப் பயணத்தை விட்டுவைப்பதில்லை. பயணம், மூளையின் ஒத்திசைவை தூண்டி, ஆக்கப்பூர்வ சிந்தனையை மேம்படுத்துவதை அறிவியல் நிரூபிக்கிறது.

மல்டி டாஸ்க் வேண்டாம்

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய அவசியமில்லை.  அப்படி  செய்வதால்  ஒரு   வேலையில் செலுத்த வேண்டிய கவனம் சிதறடிக்கப்பட்டு அந்த வேலையின் தரத்தை பாதிக்கிறது. இரண்டு வேலைகளுக்கிடையே கவனத்தை மாற்றுவதற்கான அதிகபட்ச புலன் உணர்வை செலவு செய்ய வேண்டியிருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

வாசிப்பு

சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது ஓய்வுக்காக படிக்கும் புத்தகமாகவோ அல்லது தங்கள் துறை சார்ந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அன்றைய நாளில் படிப்பதை தவிர்க்க மாட்டார்கள். மைண்ட் லேப் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வின்படி, ‘இசை கேட்டல் அல்லது நடைப்பயிற்சி இரண்டையும் விட, ‘வாசித்தல்’ அதிக அளவில் மன இறுக்கத்தை குறைக்கிறது’.

- உஷா நாராயணன்

× RELATED சென்னையில் ரகசிய கேமரா மூலம் ஆபாச படம்...