மூன்றாம் நபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பதிவு தடுக்க வழி என்ன? பத்திரப்பதிவு ஐஜி அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  திண்டிவனம் தாலுகா செட்டிக்குப்பம் கிராமத்திலுள்ள தனது நிலம் 3ம் நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக்கோரி நிலத்தின் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: நிலத்திற்கான சட்டபூர்வ உரிமையாளராக இருந்தாலும் 3ம் நபரால் அபகரிக்கப்பட்டு அதை பத்திரப்பதிவு அதிகாரிகள் பதிவு செய்துவிட்டால் அந்த பதிவை ரத்து செய்ய முடியாது. நிலத்தை மீட்க நிலத்தின் உண்மையான உரிமையாளர் சிவில் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்.

 தற்போது பதிவு அலுவலகங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட பதிவாளர் எளிதாக ஆய்வு செய்து தீர்வு காண முடியும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் சம்பந்தப்பட்ட அசையா சொத்து தன்னுடையதுதான் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்போது 3ம் நபர் பதிவு செய்திருப்பதை பதிவுத்துறை கண்டறிய முடியும்.இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான ரிச்சர்ட்சன் வில்சன் வாதிடும்போது, உயர் நீதிமன்றம் கடந்த 2011ல் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், ஒருமுறை பத்திரப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் அதை ரத்து செய்ய முடியாது. நீதிமன்றத்தை அணுகிதான் உத்தரவு பெற முடியும்.

முன்பிருக்கும் வில்லங்க சான்றுகளை வைத்து சரி பார்ப்பதற்காக பத்திரப்பதிவு அலுவலகங்களில் தற்போதுள்ள முறையை எந்த அளவு மேம்படுத்த முடியும்? சொத்துகளின் உண்மையான உரிமையாளர்களை பாதுகாக்கவும் சட்ட விரோதமான பதிவுகளை தடுக்கவும் என்ன வழி உள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.எனவே, முன்பிருக்கும் வில்லங்க சான்றிதழ்களை சரிபார்க்க ஒருங்கிணைக்கப்பட்ட சாப்ட்வேர் சிஸ்டம் உள்ளதா, அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்வதை தடுக்க என்ன வசதிகள் உள்ளது என்பது குறித்து பத்திரப்பதிவு ஐஜி ஜூலை 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஜூலை 5ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories:

>