அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

சென்னை: ‘ஒருங்கிணைக்கப்பட்ட மின் பராமரிப்பு திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக, மின்பற்றாக்குறை இல்லாத மாநிலமாக, மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டிய மாநிலமாக மின்சாரத்துறையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மின்வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், மின் பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘கொரோனா சிகிச்சை மையம், மருத்துவமனைகள் உள்ள பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் முன், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறின்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என உயரதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இதுகுறித்து மின்வாரிய தலைமையகத்தில் இருந்து தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மின்வாரிய அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், ‘10 நாட்களுக்குள் வெகுஜன பராமரிப்பு திட்டத்தின் கீழ் அத்தியாவசியமான மற்றும் முக்கியமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பகுதி, பகுதிகளாக 2 முதல் 3 மணி நேரம் மின்தடை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்வதற்கு முன்பு பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எஸ்எம்எஸ் மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக விளம்பரம் செய்ய வேண்டும்.

மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட வேண்டும். அப் லைன் க்ளியர் எடுப்பதற்கு முன்பு குறிப்பிட்ட நாளில் வேறு ஏதேனும் முக்கியமான நிகழ்வுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பயன்பாடுகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். பணிகளை தொடங்குவதற்கு முன்பு அனைத்தும் (ஊழியர்கள் மற்றும் பொருட்கள்) தயார்நிலையில் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும். கோவிட் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிதித் தேவை ஏதேனும் இருந்தால், அதற்கு முன்னர் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு தெரிவித்து தீர்வு காண வேண்டும். இப்பணி முடிந்த பிறகு வட்டம் வாரியாக அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Related Stories: