மேகதாது அணை விவகாரம் கர்நாடக முதல்வருக்கு இபிஎஸ்,ராமதாஸ் கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி:  மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் ஒருதலைபட்சமான அறிவிப்பிற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக அரசின் முயற்சிக்கு, எள்முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழ்நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.

Related Stories:

>