தனி அமைச்சகமாக பொதுப்பணித்துறையின் கட்டிட அமைப்பு மறுசீரமைப்பு 10 அரசு துறை, 24 வாரியங்கள், 5 பல்கலை கட்டுமான பணிகளை இணைக்க பரிந்துரை: முதன்மை தலைமை பொறியாளர் அரசுக்கு கடிதம்

சென்னை: பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், அரசு கூடுதல் தலைமை பொறியாளர் சந்தீப் சக்சேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறையுடன் தொழில்நுட்ப கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மீன்வளத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தொழில் மற்றும் வணிகத்துறை, கூட்டுறவு சங்கங்கள் துறை, பட்டுப்புழு வளர்ப்புத்துறை, மாநில துறைமுகத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பால்வளத்துறை ஆகிய 10 துறைகளும், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிறுதொழில் வளர்ச்சிக்கழகம், சிறுதொழில்கள் கழகம், விளையாட்டு வளர்ச்சிக்கழகம், சர்க்கரை கழகம்,  உப்பு கழகம், தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம், தொழில் வளர்ச்சி கழகம், கூட்டுறவு விற்பனை கழகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, விவசாய தொழில்கள் கழகம், கைத்தறி வளர்ச்சி கழகம், கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), மீன் வளர்ச்சிக் கழகம், கோழி இன வளர்ச்சி கழகம், இறைச்சி கழகம், தொழில் மேம்பாட்டு கழகம், மருத்துவ பணிகள் கழகம், சிமென்ட் கழகம், மின்னணு கழகம், தோல் உற்பத்தி கழகம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தர்மபுரி மாவட்ட வளர்ச்சி கழகம் ஆகிய 24 வாரியங்கள், சென்னை பல்கலை, கால்நடை பல்கலை, அண்ணா பல்கலை, டாக்டர் எம்ஜிஆர் பல்கலை, விவசாய பல்கலை ஆகிய 5 பல்கலைக்கழகங்களின் கட்டிட பணிகள் இணைக்கப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில் படிப்படியாக முதலில் அரசு துறைகள் தொடங்கி, அதன் தொடர்ச்சியாக வாரியங்கள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கட்டிட கட்டுமான பணிகளையும் பொதுப்பணித்துறை கட்டிட அமைப்பின் கீழ் செயலாக்கம் செய்ய அரசு பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். தற்போது பொதுப்பணித்துறைக்கு அரசு தனியாக அமைச்சகம் உருவாக்கியுள்ள நிலையில், தற்போது மற்ற துறைகளின் செயல்பாட்டில் உள்ள கட்டிட பணிகளையும், ஒருங்கிணைக்கப்படும் இதர துறைகளின் கட்டிட பணிகளையும் மண்டல வாரியாக சம அளவில் கட்டிட கட்டுமான பணிகளை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை கட்டிட அமைப்பை மறுசீரமைத்து அரசாணை வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>