கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநிலத் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில  செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் முன்னிலை வகித்தினர். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வால், கட்டுமானத் தொழிலே வீழ்ந்துவிடும் நிலை உருவாகிக் கொண்டிருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் எடுத்து சிமெண்ட், இரும்பு மற்றும் தளவாட பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக துறைசார்ந்த கண்காணிப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் சிமெண்ட் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த குளறுபடிகளை சரிசெய்து, கட்டுமானப் பொருள் வணிகத்தை முறைப்படுத்தி, சிமெண்ட் மற்றும் கம்பி விலைகளை உடனடியாக குறைத்து, கட்டுமானத் தொழில்கள் உயர்த்தெழவும், அத்துறை சார்ந்த முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களையும் மறு ஆய்வு செய்து, வணிகத் தளர்வுகளுக்கு வழி செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>