பெண்கள் குறித்து யூ-டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரம் பப்ஜி மதனை ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு: 2 பேர் தவிர வேறு சிலரும் சிக்குவதாக போலீசார் தகவல்

சென்னை: பெண்கள் குறித்து தனது யூ-டியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனை வரும் ஜூலை 3ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி அதை தனது யூ-டியூப் சேனல் மூலம் நேரலையில்  ஒளிபரப்பு செய்து வந்த மதன் தனது யூ-டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர் சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், பப்ஜி மதன் மீது மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கொடுக்கபட்ட புகார்களும் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் யூ-டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.யூ-டியூபர் மதன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை பிடிக்கும் பொருட்டு மதனின் தந்தை, அண்ணன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மதனின் மனைவி கிருத்திகா மதனுக்கு யூ-டியூப் சேனல் நடத்த உடந்தையாக இருந்து வந்தது தெரியவந்தது.

மேலும், மதன் யூ-டியூப் மூலம் மாதம் 7 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி அதன் மூலம் சொகுசுக் கார்கள் மற்றும் சொகுசு பங்களாக்களை வாங்கிக் குவித்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மதனை தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம், பெங்களூர், தர்மபுரி ஆகிய இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பப்ஜி மதன் தர்மபுரி மாவட்டம், மதன்கூன்பாளையம் என்ற இடத்தில் உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதனை மத்திய குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன், கார் போன்றவற்றை பறிமுதல் செய்து வங்கி கணக்குகளையும் முடக்கினர்.

கைது செய்யப்பட்ட மதனை சென்னை அழைத்து வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் மதனை நேற்று மதியம் சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவம் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து மதனை பூந்தமல்லி கிளை சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதனின் மனைவி கிருத்திகா மற்றும் மதனை ஒன்றாக காவலில் எடுத்து விசாரணை நடத்த அடுத்தகட்டமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மதனுக்கு அதிகமாக பணம் கொடுத்தவர்களின் விவரம் மற்றும் மதன் மற்றும் கிருத்திகா வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றவர்களின் விவரம்,  எங்கெங்கு சொத்துக்கள் வாங்கி வைத்து உள்ளார்கள் போன்ற விவரங்கள் பெறப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மதனுடன் நெருங்கிய பணப்பரிவர்த்தனையில்  ஈடுபட்ட பெண்கள் குறித்தும் போலீசார் பல கேள்விகளை கேட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த வழக்கில் மதன் மற்றும் கிருத்திகாவை தவிர வேறு சிலரும் சிக்குவார்கள் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* புகாரளிக்க மின்னஞ்சல் முகவரி

மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.மதன் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாட்டில் ஈடுபடுவதும், பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.மதனை நம்பி பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம் .ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் dcpccb1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம்.

* சொகுசு வீடுகள், கார், நகை

மதனின் மனைவியின் வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் மற்றும் தாம்பரம்,  பெருங்களத்தூரில் 45 லட்சம் மதிப்பில் சொகுசு வீடு, 2 சொகுசு கார்கள், பல லட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ளளனர். வங்கியில் உள்ள ரூ.4 கோடியை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மோசடி புகார்கள் குவிய துவங்கி உள்ளதால் வங்கியில் உள்ள ரூ.4 கோடியை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: