கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறப்பு, சட்ட வாரிசு சான்றிதழ் தாமதமின்றி வழங்க வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் இறப்பு சான்றிதழ் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறப்பு சான்றிதழ்களை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்தவாறு இருந்தது. ஏற்கனவே, இறப்பு சான்றிதழ்களை முறையாக வழங்க அரசு அறிவுறுத்தியது. ஆனால், தொடர் புகாரை அடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது நோயாளிகளின் பெயர், முகவரி, வயது மற்றும் பிற விவரங்களை முறையாக பதிவேற்றம் செய்வது இல்லை. இதனால், நோயாளிகள் இறக்க நேரிடும் போது இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்களைப பெறுவதற்கு உறவினர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அரசு பலமுறை அறிவுறுத்தியும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. எனவே, இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து இறந்தவரின் சரியான விவரங்களை பதிவேற்றும்படி மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தவும், இறப்பு மற்றும் சட்ட வாரிசு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: