தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு வருகை

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேயில் இருந்து நேற்று சென்னை வந்தது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. எனவே தமிழ்நாடு அரசே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி, நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்கிறது. அந்த விதத்தில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவழைக்கப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை 5.15  மணிக்கு புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 26 பார்சல்களில் சென்னை பழைய விமான நிலையம் வந்தன. லோடர்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பார்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினர். அதன்பின்பு தடுப்பூசி பார்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் குளிர்சாதன வாகனத்தில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும்.

Related Stories: