நள்ளிரவில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி போலீஸ்காரரை கொல்ல முயன்றதை தடுத்த விவசாயி படுகொலை: பிடிபட்டவனை மீட்க கொள்ளையர் வெறிச்செயல்

திருவாரூர்:  திருவாரூர் அருகே நள்ளிரவில் ஏடிஎம்மில் நடந்த கொள்ளை முயற்சியின்போது பிடிபட்ட கொள்ளையனை மீட்க இன்னொரு கொள்ளையன் போலீஸ்காரரை ஸ்குரூ டிரைவரால் குத்த முயன்றான். அப்போது தடுக்க முயன்ற  விவசாயி, நெஞ்சில் குத்துப்பட்டு இறந்தார். திருவாரூர் மாவட்டம்  கூடூர் கிராமத்தில் திருத்துறைப்பூண்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜராஜன் (40). வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மைதிலி (35). இவர் குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். வீட்டுக்கு முன் இவர்களுக்கு சொந்தமான 4 கடைகள் உள்ள காம்ப்ளக்ஸ் உள்ளது.

இதில் ஒரு கடையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் ஏடிஎம் மையம் உள்ளது.  எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இதற்கு காவலாளி இல்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஒரே பைக்கில் 4 பேர் காஸ் சிலிண்டர், வெல்டிங்  கட்டர்களுடன் வந்து ஏடிஎம் மையத்துக்கு வந்துள்ளனர். இதில் ஒருவன் பைக் அருகே வெளியில் காவலுக்கு நின்றிருந்தான். மற்ற 3 பேரும் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சத்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிக்கும் ஒருவர் எழுந்து வந்து பார்த்த போது, கொள்ளை முயற்சி நடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், மைதிலிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக பக்கத்து தெருவில்  வசிக்கும் விவசாயியான தனது  தந்தை தமிழரசனுக்கு (60) தெரிவித்தார். உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தார். இதனிடையே அப்பகுதி மக்கள் திரண்டு பைக் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்தனர். மக்கள் கூடவே ஏடிஎம் மையத்துக்குள் இருந்த 3 பேரும் தப்பி ஓடி விட்டனர். அப்பகுதியினர் பிடிபட்ட நபரை பைக்குடன், கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இதனிடையே அப்பகுதியில் ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ சிவகுருநாதன், போலீஸ்காரர் சாமிநாதன் ஆகியோர் அங்கு வந்து, பிடிபட்ட மன்னார்குடி அருகே லெட்சுமாங்குடியை சேர்ந்த மதனை (20) மீட்டு விசாரித்தனர்.  

இந்நிலையில் மதனை  மீட்பதற்காக தப்பி ஓடிய 3 கொள்ளையர்களும் மீண்டும் அங்கு வந்து மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து நின்றனர். திடீரென 3 பேரில் ஒருவன், ஸ்குரூ டிரைவரால் போலீஸ்காரர் ஒருவரை குத்த ஓடி வந்தான். இதை பார்த்த தமிழரசன் தடுப்பதற்காக குறுக்கே  வந்தார். அப்போது அவரது நெஞ்சில் சரமாரி குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழரசன் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.  இதைத்தொடர்ந்து 3 கொள்ளையர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

தகவலறிந்து திருவாரூர் தாலுகா போலீசார் வந்து பிடிபட்ட 4 பேரையும்  கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில்  மற்ற 3 பேரும் திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே வடபாதிமங்கலத்தை  சேர்ந்த பிரதாப் (20), கூடூர் அருகே ஊட்டியாணி கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் (20),  விஜய்(20) என தெரியவந்தது. இவர்கள் காஸ் சிலிண்டர், கட்டர், காஸ்  டியூப்களை வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. அவற்றையும் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* 3 பேருக்கு கை, கால் முறிந்தது

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேர் தப்பி ஓடும்போது கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் கால் முறிந்தும், ஒருவர் கை முறிந்தும் சிகிச்சை பெறுகின்றனர்.

* காஸ் சிலிண்டரை திருடி வந்து கைவரிசை

கொள்ளை முயற்சி நடந்த ஏடிஎம் மையத்திலிருந்து 50 அடி தூரத்தில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் பட்டறை உள்ளது. இங்கு 2 நாட்களுக்கு முன் ஷட்டரை உடைத்து காஸ் சிலிண்டர், காஸ் கட்டர், டியூப்கள் கொள்ளை போனது. இது குறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டறையில் கொள்ளையடித்த காஸ் சிலிண்டரை பயன்படுத்தி தான் கொள்ளையர்கள் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: