சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடு ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் பிளவு

ஈரோடு: சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தனித்தனியே கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களிடம் செல்போனில் பேசி, அந்த ஆடியோவை சசிகலா வெளியிட்டு வருகிறார். இது அக்கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும், மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான சிவசுப்பிரமணி, முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், முன்னாள் எம்எல்ஏ கிட்டுசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தைபோலவே, நேற்று பெரியார் நகர் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் அவரது அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கூட்டத்தில் மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏக்கள் சிவசுப்பிரமணி, பூந்துறை பாலு உள்ளிட்டோர் மற்றும் பகுதி நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால், மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதும், மாநகர் மாவட்ட அதிமுக இரண்டாக பிளவடைந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories:

>