குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலடி

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, 2017ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நடந்து வரும் மரண தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் ஆஜராவதற்கு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை குல்பூஷனுக்கு வழங்கும் மசோதா, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவர்த்தி செய்யும்படி பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டது.

இதற்கு நேற்று பதில் அளித்துள்ள பாகிஸ்தான் அரசு, ‘குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியா தவறாக சித்தரிக்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அளித்துள்ள பதிலில், ‘‘சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாதவின் வழக்கை நடத்துவதற்காக வழக்கறிஞரை நியமிக்கும் மசோதா, விதிமுறைப்படி இல்லை. சர்வதேச சட்டத்தில் ஒரு அரசு தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியதா என்பதை உறுதி செய்ய, உள்நாட்டு கீழ் நீதிமன்றங்கள் நடுவராக இருக்க முடியாது,’’ என்றார்.

Related Stories: