தம்பதி மட்டுமே வசிக்கும் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு: வீடு கட்ட அரசாணை வழங்கினார்

திருச்சுழி:  தினகரன் செய்தி எதிரொலியால் தம்பதி மட்டும் வாழ்ந்த குச்சம்பட்டி  கிராமத்திற்கு கலெக்டர் மேகநாதரெட்டி சென்று ஆய்வு செய்தார். வீடு கட்ட அரசாணையையும் வழங்கினார். விருதுநகர் மாவட்டம்,  திருச்சுழி அருகே குச்சம்பட்டி கிராமத்தில் கடும் வறட்சியால் கிராமத்தை விட்டு பலர் வெளியேறிவிட்டனர். தற்போது இக்கிராமத்தில் வயதான தம்பதியான சுபாஷ் சந்திரபோஸ், சீதாலட்சுமி மட்டும் வசிக்கின்றனர். இடிந்து விழும் நிலையில் இருப்பதால், தங்களுக்கு வீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த ஜூன் 17ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று குச்சம்பட்டிக்கு சென்றார். பசுமை வீடு திட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தம்பதிக்கு வீடு கட்டுவதற்கான அரசாணையை வழங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சுபாஸ்சந்திரபோஸ் தம்பதி, தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: