காவு வாங்கும் ‘பறக்கும் சவப்பெட்டி’ படிப்படியாக ஓய்வு: 2024க்குள் எல்லா கதையும் முடியும்

ஐதராபாத்: இந்திய விமானப்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து கடந்த 1960ம் ஆண்டுகளில் மிக்-21, மிக்-27 போர் விமானங்கள் வாங்கப்பட்டன. இவற்றுக்கு 1990ம் ஆண்டுடன் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். ஆனால், விமானப்படைக்கு புதிய விமானங்கள் வாங்க முடியாததால், இந்த விமானங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இறுதியாக இவை, 2005 - 2010ல் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டன. ஆனால், விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப  கோளாறுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு விமானிகளை பலி வாங்குவது தொடர் கதையாக இருக்கிறது. இதுவரையில் 400 விமானங்கள் விபத்தில் நொறுங்கி உள்ளன. இதனால், இந்த விமானங்கள் ‘பறக்கும் சவப்பெட்டிகள்’ என கிண்டலாக அழைக்கப்படுகிறது.

படையில் இருந்து இவை படிப்படியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு வந்த போதிலும், இன்னும் பணியில் தொடர்கின்றன. இந்தாண்டில் மட்டுமே இதுவரை 3 விமானங்கள் விபத்தில் நொறுங்கி உள்ளன. தெலங்கானா மாநிலம், துண்டிகல் விமானப் பயிற்சி தளத்தில் பயிற்சியை முடித்த பட்டதாரிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற விமானப்படை தளபதி பதவுரியாவிடம் மிக்-21 விமானங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, ‘‘2024க்குள் இந்த விமானங்கள் படிப்படியாக படையில் இருந்து நீக்கப்படும். இதற்கு பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும். மிக் விமானங்கள் இப்போது நன்றாக பறக்கும் நிலையில் உள்ளன. எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன,’’ என்றார்.

* ரபேல் கிடைப்பதில் தாமதம்

ரபேல் விமானங்கள் பற்றி அவர் கூறுகையில், ‘‘பிரான்சிடம் இருந்து வாங்கப்படும் 36 ரபேல் போர் விமானங்களும் 2022ம் ஆண்டுக்குள் திட்டமிட்டப்படி வந்து சேரும். கொரோனா பிரச்னையின் காரணமாக, ஓரிரு விமானங்கள் வந்து சேர்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று கருதுகிறேன்,’’ என்றார்.

Related Stories: