மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ல் நடத்தப்படுமா? நாடாளுமன்ற குழு நாளை ஆலோசனை

புதுடெல்லி: இந்தாண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரக் குழுவின் கூட்டம் நாளை நடக்கிறது. கடந்தாண்டு மார்ச்சில் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால், வழக்கமாக ஜூலையில் துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ல் தொடங்கியது. இது, அக்டோபர் 1 வரை வார விடுமுறை இன்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தொடரின் போது 25க்கும் மேற்பட்ட எம்பி.க்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், செப்டம்பர் 23ம் தேதியே தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 29ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் முதல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 8ம் தேதி 2ம் கூட்டத் தொடர் தொடங்கியது.

அப்போதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், மார்ச் 25ம் தேதியே நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி முதல் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் ஜூலை முதல் வாரம் ஆலோசனை நடத்துகின்றனர். இந்நிலையில், இத்தொடரை நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. பின்னர், இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Related Stories: