கோவாக்சின், கோவிஷீல்டு மூதாட்டிக்கு அடுத்தடுத்து 5 நிமிடத்தில் 2 தடுப்பூசி: பீகாரில் அலட்சியம்

பாட்னா:  பீகாரில் மூதாட்டி ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள அவந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுனிலா தேவி (63). இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கடந்த 16ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், தடுப்பூசி போடுவதற்காக சுனிலா தனியாக சென்றார். இவர் படிப்பறிவு இல்லாதவர். இந்த முகாமில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதற்காக தனித்தனி வரிசைகளில் மக்கள் நிறுத்தப்பட்டனர். முதலில் ஒரு வரிசையில் நின்ற சுனிலா, தனது பெயரை பதிவு செய்துக் கொண்டு அறைக்குள் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக, அவரை  சிறிது நேரம் அமரும்படி நர்ஸ் கூறியுள்ளார். அதன்படி அமர்ந்திருந்த சுனிலா, அடுத்த வரிசையையும் பார்த்ததும் அங்கும் போய் நின்றார். அங்கு மற்றொரு நர்ஸ் அவருக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளார். அடுத்தடுத்து 5 நிமிடங்களில் இது நடந்தது. வீட்டுக்கு சென்ற அவர், ‘ரெண்டு ஊசி போட்டாங்க...’ என்று கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தடுப்பூசி முகாமுக்கு சென்று விசாரித்தனர். தவறு நடந்து விட்டதாக அவர்கள் பதறினர். அவர்களுடன் சுனிலாவின் குடும்பத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 2 நர்சுகளிடமும் சுகாதார துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். 2 தடுப்பூசி போட்டதால் சுனிலாவை மருத்துவர் குழு கண்காணித்து வருகிறது. அவர் நலமாக இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

Related Stories: