நேட்டோ படைகள் வாபசால் அடக்க ஆளில்லை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் அட்டகாசம்: 27 மாவட்டங்களை கைப்பற்றி போர்க்கோலம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை திரும்ப பெற தொடங்கிய பிறகு, அரசு கட்டுபாட்டில் இருந்த 27 மாவட்டங்களை தலிபான் தீவிரவாத அமைப்பு கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001ல் அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி நடத்திய தாக்குதலில், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை, அங்கு ஆட்சி செய்து வந்த தலிபான் தீவிரவாத அமைப்பின் அரசை அகற்றியது. அங்கு, ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலிபான்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்தது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக அரசுப் படைக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் போரிட்டு வந்தன. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க முயற்சி மேற்கொண்டது.

சமீபத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், வரும் செப்டம்பருக்குள் தனது படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பும் வீரர்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதன்படி, கடந்த மாதம் 1ம் முதல் நேட்டோ படை வீரர்கள் திரும்ப பெறப்பட்டு வருகின்றனர். இதனால், நேட்டோ படைகள் இல்லாததால் தலிபான்களின் கை ஓங்கியுள்ளது. அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அரசுப் படைகள், அரசு கட்டிடங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களையும் வன்முறையையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டுமே அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 27 மாவட்டங்களை தலிபான்கள் தாக்குதல் நடத்தி கைப்பற்றி உள்ளனர். இதில், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏராளமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: