அமைச்சர் பதவி வழங்கக் கோரி புதுவை பாஜ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜான்குமார் ஆதரவாளர்கள் போராட்டம்: கட்சி பேனர் கிழிப்பு: சாலை மறியல்

புதுச்சேரி:  புதுச்சேரி பாஜக எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அலுவலக பெயர் பலகையை கிழித்துடன் கதவுகளை அடித்து உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் என்ஆர் காங்., பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  கடந்த 16ம் தேதி சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. திடீரென ஜான்குமாருக்கு பதில் சாய் ஜெ சரவணன்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறப்பட்டது.  

இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ஸ்ட் ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, அமைப்பு பொது செயலாளர் சந்தோஷை சந்தித்து பேசினர்.  இந்நிலையில், ஜான்குமாரின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கட்சி அலுவலக பெயர் பலகையை கிழித்தெறிந்ததோடு, அலுவலக கதவை உடைத்து சூறையாடினர். பரபரப்பு ஏற்படவே, ஜான்குமார் எம்எல்ஏ டெல்லியில் இருந்து போனில் பேசியபிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதோடு நெல்லித்தோப்பு சிக்னலில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் சாமிநாதன் கூறினார். பாஜக தரப்பில் இருந்து அமைச்சர் பதவிக்கு நமச்சிவாயம், சாய். ஜெ. சரவணனன் குமார் பெயர் தரப்பட்டுள்ளதால், முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநரை எந்தநேரத்திலும் சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை வழங்கலாம் என தெரியவந்துள்ளது.

*  `6 மாதங்களுக்கு மட்டும் பதவியை கொடுங்கள்’

டெல்லியில் உள்ள ஜான்குமார் எம்எல்ஏ கூறுகையில்,  `எனக்கு அமைச்சர் பதவி தருவதாக 4 நாட்களுக்கு முன்பு உறுதி செய்தார்கள். அதனை நம்பி செய்தித்தாள், தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துவிட்டேன். வேளாங்கண்ணி கோயிலிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு பணம் கட்டியிருந்தேன். கடைசி நேரத்தில் சாய் ஜெ சரவணன்குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்கிவிட்டு, மீதியுள்ள 4 ஆண்டுகள் அமைச்சராக இருங்கள் என கூறுகிறார்கள். கட்சி தலைமையிடம், எனக்கு குறைந்தபட்சம் 6 மாதம் அமைச்சர் பதவியை கொடுங்கள். அதன் பிறகு, நானே பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன், என்றேன். நான் என்ஆர் காங்கிரசில் இருந்திருந்தால் அமைச்சராகி இருப்பேன். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி அமைந்து மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் சேர்ந்தேன்’ என்றார்.

Related Stories: