போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

நெல்லை:  தமிழகத்தில் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று  வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை  அமைச்சர்  பி.மூர்த்தி  ஆலோசனை நடத்தினார். கூட்டத்துக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: போலி ரசீதுகள் மூலமாக வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது  சட்டரீதியான நடவடிக்கையும்,  நடைமுறை சட்டத்தின் படி ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வழிவகை இருக்கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் வரி குறித்து முதல்வருடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும். தற்போது பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள், 90 சதவீதம் பதிவு செய்யப்பட்ட அன்றே வழங்கப்பட்டு வருகிறது.

பட்டா மாறுதல்களுக்கு உடனடியாக பட்டா வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆவணப்பதிவு தொடர்பான  94984 52110, 94984 52120, 94984 52130 என 3 எண்களை கொண்ட கட்டுப்பாட்டு அறையில் 370 புகார்கள் பெறப்பட்டு, 100 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. பத்திரபதிவை விரைவுப்படுத்த பதிவு செய்ய வருபவர்களின் பெயரோடு நேரத்தையும் குறிப்பிட்டு டோக்கன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 525 பத்திரப்பதிவு அலுவலங்களிலும் 10 தினங்களுக்குள் இது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

* ரூ.15 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிலுவை

கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து வணிகவரி நிலுவைத் தொகையாக சுமார் ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு வர வேண்டியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான மருந்து பொருட்கள் மீது முழு வரி விலக்கு கோரிக்கையை ஏற்று 18 சதவீதமாகவும், 15 சதவீதமாகவும் இருந்த வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கருப்பு பூஞ்சைக்கான தடுப்பு மருந்திற்கு முழு வரிவிலக்கை நிதி அமைச்சர் போராடி பெற்றுள்ளார் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

Related Stories:

>