பறக்கும் சீக்கியர் மில்கா சிங் மறைந்தார்: பிரபலங்கள், ரசிகர்கள் புகழஞ்சலி

சண்டிகர்: பறக்கும் சீக்கியர் என புகழ்பெற்ற இந்திய தடகள நட்சத்திரம் மில்கா சிங் கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். அவரது மறைவுக்கு  பிரதமர், விளையாட்டு பிரபலங்கள்,  ரசிகர்கள்  புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (91), சண்டிகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  வீட்டு வேலைக்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து,  குடும்பத்துடன் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு மட்டும் தொற்று உறுதியானது. மனைவியும், இந்திய கைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனுமான நிர்மல் சைனி, மருமகள்,  பேரப்பிள்ளைகளுக்கு தொற்று இல்லை. அறிகுறிகள் அதிகமானதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில்  அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவர் உடல்நிலையும் மோசமடைந்ததால்  தீவிர  சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். இந்நிலையில்  ஜூன் 13ம் தேதி நிர்மல் உயிரிழந்தார். மில்காவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் சிறப்பு அனுமதி பெற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு நேற்று முன்தினம் இரவு மில்காவும் உயிரிழந்தார்.  பிரபல விளையாட்டு தம்பதி அடுத்தடுத்து கொரோனாவால் உயிரிழந்தது விளையாட்டு உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த மில்காவுக்கு  குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்,  பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரரான மில்கா சிங் தான் சர்வதேச அளவில் புகழ்பெற்ற  முதல் இந்திய தடகள வீரர். அவரது ஒரே மகன் ஜீவ் மில்கா சிங்  பிரபல கோல்ப் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்கா சாதனை

மில்கா சிங்  200, 400 மீட்டர் ஓட்டங்களில் நாட்டுக்காக  ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளார். காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கே உரியது (1958, கார்டிப்).  ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும்   1958 (டோக்கியோ), 1962ல் (ஜகார்தா) 3 தனிநபர் தங்கம் மற்றும் ரிலே ரேசில் ஒரு தங்கம் வென்றுள்ளார்.

ஜஸ்ட் மிஸ்!

இத்தாலியின் ரோம் நகரில் 1960ல் நடந்த ஒலிம்பிக்சின் 400 மீட்டர்  பிரிவில் 4வது இடம் பிடித்து ஒரு விநாடிக்கும்  குறைவான நேரத்தில் பதக்க வாய்ப்பை இழந்தார். பைனலில்  அமெரிக்காவின்  டேவிஸ் 44.9 (45.07) விநாடி,  ஜெர்மனியின் காப்மன்  44.9 (45.08), தென் ஆப்ரிக்காவின் ஸ்பென்ஸ் 45.5 (45.60) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர். நமது மில்கா 45.6 (45.73) விநாடிகளில் இலக்கை எட்டி 4வது இடத்தை பிடித்தார்.

அன்று தொடங்கிய ஓட்டம்

பாகிஸ்தானில் உள்ள  கோவிந்தபுராவில் தான்  மில்கா 1929ல் பிறந்தார்.  அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த பள்ளிக்கு தினமும் நடந்து செல்வார்.  இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அவரது கண் எதிரிலேயே பெற்றோர், 2 சகோதரிகள், ஒரு சகோதரர் என 5 பேர் கொல்லப்பட்டனர்.  உயிர் விடும் நேரத்தில் அவரது தந்தை ‘ஓடிவிடு இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக் கொன்று விடுவார்கள்’  என சொல்லியுள்ளார். அன்று இந்தியாவை நோக்கி ஓட ஆரம்பித்தவர், இந்தியாவுக்காகவும் ஓடி புகழ் சேர்த்தார்.

பாகிஸ்தானை பறக்க விட்ட மில்கா  

பாகிஸ்தானில் 1960ல்  நடந்த  ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க மில்காவுக்கு  அழைப்பு வந்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்து விட்டார். பின்னர் அன்றைய பிரதமர் நேரு விடுத்த வேண்டுகோளை ஏற்று  பாகிஸ்தான் சென்றார்.  அந்த போட்டியில்  பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தார். பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் அயூப்கான், ‘நீங்கள் ஓடவில்லை... பறந்தீர்கள்’ என்று புகழாரம் சூட்டியதுடன் ‘பறக்கும் சீக்கியர்’ என்ற பட்டத்தையும் அளித்தார்.

சிறையும், சினிமாவும்

பாகிஸ்தானில் இருந்து உயிருக்கு அஞ்சி ஓடி வந்தவர், இந்திய எல்லையில் ரயிலிலும் பயணம் செய்தார்.   டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தார் என்று சில நாட்கள் திகார் சிறையிலும் அடைக்கப்பட்டார். டெல்லியில் இருந்த அவரது சகோதரி, நகையை விற்று அபராதம் கட்டி தம்பியை விடுவித்துள்ளார். அவர் ‘ தி ரேஸ் ஆப் மை லைப்’ என்ற பெயரில் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதினார்.  அது பின்னர்   ‘பாக் மில்கா பாக்’ என்ற பெயரில் இந்தி திரைப்படமாக வெளியானது.

Related Stories: