சிவகங்கையில் அறநிலையத்துறை அதிரடி அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்கள் அபகரித்த ரூ.10 கோடி கோயில் நிலம் மீட்பு

சிவகங்கை: சிவகங்கையில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் அபகரித்த ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் இடம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335 மற்றும் 330ல் உள்ள சுமார் 11 ஏக்கர் நிலத்தை கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சராக இருந்த பாஸ்கரனின் உறவினர்கள் போலி பத்திரம் தயார் செய்து ஆக்கிரமித்து அதில் கம்பி வேலி அமைத்தனர். அதில் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டினர். அபகரிக்கப்பட்ட இடத்தை மீட்கவும், வணிக வளாக கட்டிட பணியை நிறுத்தவும் வலியுறுத்தி சிவகங்கை நகர் திமுக செயலாளர் துரைஆனந்த், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கடந்த ஜூன் 16ம் தேதி புகார் மனு அனுப்பினார்.

இது குறித்து இந்து சமய  அறநிலையத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், ஆணையாளர் செல்வி, சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், செயல் அலுவலர் நாகராஜ், சிவகங்கை நகர் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு வந்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு சீல் வைத்தனர். மேலும் வணிக வளாகத்தையும் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் இணை ஆணையர் தனபால் கூறுகையில், ‘‘கோயிலுக்கு சொந்தமான 9 ஏக்கர் 58 சென்ட் இடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிட பணிகள் நடப்பதை தொடர்ந்து பலமுறை தடுத்து நிறுத்தினோம். ஆனாலும் மீண்டும் பணிகள் நடந்து வந்தது. இன்று (நேற்று) இந்த இடத்தை மீட்டுள்ளோம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடி ஆகும்’’ என்றார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘கவுரி பிள்ளையார்கோயில் இடம் ஆக்கிரமிக்கப்பட்டதில் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ எவ்வித தொடர்பும் இல்லை. இப்பிரச்னையை சட்டரீதியாக  எதிர்கொள்வேன்’’ என்றார்.

* அதிமுகவினர் மேலும் நிலங்கள் ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு தொடர்பாக புகாரளித்த சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்த் கூறுகையில், ‘‘புகாரளித்த 4 நாட்களில் நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி. கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மற்றொரு உறவினர் ஒருவர் 5 ஏக்கர் நிலம், மானாமதுரை அதிமுக ஒன்றிய நிர்வாகி ஒருவர் 1.50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: