தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை முடிகிறது பஸ்களை இயக்க அனுமதி? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

சென்னை: தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜவுளி, நகைக்கடைகளை அரசின் விதிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்று இருந்தது. இது 60 ஆயிரம் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். மாநிலம் முழுவதும் கூடுதல் மருத்துவமனைகள், ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள், தேவையான அளவுக்கு ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் என்று தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக போடப்பட்டு, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது பாதிப்பு 8 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி முதல் மே 7ம் தேதி வரையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருந்தது. 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தநிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கில், காய்கறி, பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், சலூன், டீக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்கவும் இந்த ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சிறிய அளவிலான தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டது. இங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. இந்தநிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துதல், அடுத்தகட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞனி டாக்டர் செளமியா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டல குழுமத் தலைவர் கே.என்.அருண் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்துவது, கொரோனா 3ம் அலை ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் 3ம் அலை ஏற்பட்டால் மருத்துவமனைகளில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவையை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூடுதல் தளர்வுகளை வழங்கி 27 மாவட்டங்களில் நகைக்கடைகள், துணிக்கடைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அப்போது பொது போக்குவரத்தை இயக்குவது மற்றும் சில தளர்வுகளை வழங்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தொற்று அதிகம் இருந்த 11 மாவட்டங்களிலும் தற்போது தொற்று குறைந்து வருவதால் அங்கும் சில தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளை வழங்கும்போது தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே சுற்றாத வகையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து காவல்துறை, நிதித்துறை, குடிநீர் வழங்கல் துறை, தொழில்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். எனவே, மாவட்டங்களில் பொது போக்குவரத்து  சேவையை கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது, ஜவுளி, நகைக்கடைகளை திறப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்த  அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>